சென்ற இதழ் தொடர்ச்சி...
சனகாதி முனிவர்களுக்கு வேதங்களைப் புகட்டிய தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை வணங்கி, பன்னிரு தமிழ் மாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத் தேர்வு எவ்வாறு அமைத்துக்கொண்டால் நலம், லாபம், சுபப் பலன் ஏற்படும் என்பதன் தொடர் வரிகள்தான் இந்த கட்டுரை. சென்ற கட்டுரையில் ஆவணியில் பிறந்தவர்கள்வரை அதிர்ஷ்டக்குறிப்புகளை வாசகர்களின் கவனத்திற்குத் தந்திருந்தேன். மற்ற தமிழ் மாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் எதனால் அமையும் என்பதை இங்கு காணலாம்.
எப்படி ஒரு ஜாதகத்திற்கு "ஸ்ரீ கருடயக்ஞம்' செய்துகொள்வதால் சர்ப்ப தோஷமும், விஷ பயங்களும் அணுகாதோ, "ஸ்ரீசூரிய நாராயண ஹோமம்' செய்வதால் தடைப்பட்ட அனைத்து நற்காரியங்களும் வெற்றி பெறுமோ, அதைப்போலவே சூரியன் நின்ற ராசியின் அடிப்படையில் அதிர்ஷ்டம் தரும் தொழிலும் வாழ்வும் சில ஜோதிட நியதிகள்படியேதான் மலர்கின்றன.
தமிழ் மாதம் புரட்டாசியில் (கன்னி சூரியன்) பிறந்தவர்கள் திருமண பந்தம் மற்றும் தொழில் நட்பு வகையை வைகாசி (ரிஷப சூரியன்), தை மாதம் (மகர சூரியன்) பிறந்த ஜாதகர்களுடன் அமைத்துக்கொண்டால் லாப அனுகூலம் ஏற்படும். இருவரின் மதிநுட்பமும், குணஒற்றுமையும் வாழ்வில் உயர்த்தும். ஆனால் சித்திரை, ஆவணி, ஐப்பசி, மாசியில் பிறந்தவர்களுடன் கவர்ச்சியும் வியாபார சுவாரஸ்யமும் ஏற்படாது. திருமணத்திற்கும் தொழில் பார்ட்னர்ஷிப்பிற்கும் இந்த மாதங்களில் பிறந்தவர்களைத் தவிர்த்தால் வாழ்வில் உயர்வீர்கள். புரட்டாசியில் பிறந்த அதிபுத்திசாலிகள், உங்களது மணநாளை புதன், வெள்ளிக்கிழமைகளிலும், தொழில் ஆரம்பத் தேதிகளை 14, 23 ஆக அமையும்படியும் பார்த்துக் கொண்டால் சுபப்பலன் விருத்திதான்.
ஐப்பசி மாதம் பிறந்தவர்கள் கட்டுடல் வாய்ந்தவர்கள்; கலையில் சிறந்தவர்கள். வழக்கறிஞர்கள், நீதிபதிகள் பலர் துலா லக்னம், துலா மாதத்தில் பிறந்தவர்களே. உங்களுக்கு நட்பு, வாழ்க்கைத்துணை மற்றும் தொழில்வகை உறவுகளுக்கு ஆனி, ஆவணி, மாசி, மார்கழி மாதங்களில் பிறந்தவர்கள் அனுகூலம், ஆதாயமாக இருப்பார்கள். பங்குனி, கார்த்திகை, புரட்டாசி, வைகாசி மாதங்களில் பிறந்தவர்களுடன் விட்டுக்கொடுத்துப் போக இயலாது. (சர் ஆக்த்ன்ள்ற்ம்ங்ய்ற் இங்ற்ஜ்ங்ங்ய்) திருமணம் மற்றும் தொழில்கூட்டு வகைக்கு தவிர்க்கவேண்டியவர்கள் கடகம், விருச்சிகம், கன்னி ராசிகளில் சூரியனைப் பெற்ற நபர்களே. வியாபாரம், உற்பத்தி, புதுமுதலீடுகள் ஆரம்பிக்க 6, 15, 24-ஆம் தேதிகள் மிக அதிர்ஷ்டம் தரும்.
என்றுமே மாறாத ஜோதிடவிதி யாதெனில், பன்னிரு மாதங்களில் எதில் பிறந்தவராயினும், லக்னாதிபதி 6-ல் நின்று அல்லது 6-ஆம் அதிபதியுடன் கூடி, அந்த 6-மதிபதியின் புத்தி, அந்தரம் நடக்கும் கோட்சாரங்களில் மனக்கஷ்டம், பணக் கஷ்டம், உடல் கஷ்டம் அனுபவமாகும். வம்பு வழக்கால் நீதிமன்ற அலைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
விருச்சிகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் கார்த்திகையில் பிறந்தவர்களுக்கு மோகவேட்கை முந்தும்.
வாளிப்பான தேகத்திற்கும், வசதிமிக்க வாழ்க்கைக்குமே திட்டமிடுவீர்கள். பொருத்தமான மணவாழ்க்கைக்கும், லாபகரமான வெற்றிக்கூட்டணிக்கும் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் ஆடி மாதம் (கடக சூரியன்), பங்குனி மாதம் (மீன சூரியன்) பிறந்த யோகவான்களே. இவர்களுடன் மனநிலை, தனநிலை சிறப்பாகவே அமையும். தவிர்க்கவேண்டிய நபர்கள் சித்திரை, ஆனி, மார்கழி மாதத்தில் பிறந்தவர்களே. இவர்களுடன் வாஞ்சையும் வசீகரமும் நல்லுறவும் அமையாது. சதா சச்சரவே நிலவும். கார்த்திகையில் பிறந்தவர்களுக்கு வியாழக்கிழமையும், 9, 18, 27-ஆம் தேதிகளும் திருமணம் மற்றும் தொழில் ஆரம்பத்திற்கு அதிர்ஷ்டம் தரும்.
தனுர் மார்கழியில் பிறந்தவர்கள் ஞானமார்க்கத்தில் அதிக ஈடுபாடு கொள்பவர்களே. தனது சந்ததியர்களுக்கு பொருள் வளம் நிச்சயம் சேர்த்துவிடுவார்கள். இவர்கள் சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்களை வாழ்க்கைத்துணையாகவும், தொழில், வியாபாரக் கூட்டாளியாகவும் கொள்வது மிக வளம் சேர்க்கும். நிம்மதியான வாழ்வளிக்கும். விதிவசத்தால் வைகாசி, ஆடி, தை, கார்த்திகை மாதங்களில் பிறந்தவர்களுடன் இல்லறப் பிணைப்போ, தொழில் ஒப்பந்தமோ ஏற்பட நேர்ந்தால், கவர்ச்சியோ தனவளர்ச்சியோ ஏற்படுவதில்லைதான். சோதனையே வாழ்வாகும். வியாழக்கிழமையும், 3, 21, 30 ஆகிய தேதிகளும் உங்களுக்கு அதிர்ஷ்ட வரவு தரும். பயன்படுத்தி முன்னேறுங்கள்.
மகரத்தில் சூரியன் நின்ற தைமாதப் பிறப்புகள், கொண்ட குறிக்கோளுக்காக மனவுறுதியுடன் விடாமுயற்சி செய்து வெற்றியடையும் லட்சியவாதிகள். இவர்கள் ஐப்பசி, புரட்டாசி, வைகாசி ஆகிய மாதங்களில் பிறந்தவர்களைத் திருமணம் மற்றும் தொழில், வர்த்தகப்பங்கு, கூட்டுகளுக்கு வரித்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டமான மணவாழ்வும், லாபகரமான தொழிலும் அமைவது திண்ணம். ஆனால் பங்குனி, மார்கழி, ஆனி, ஆவணி மாதங்களில் பிறந்தவர்களுடன் மாங்கல்ய பந்தமும், தொழில், வியாபாரக் கூட்டும் அமைய நேரிட்டால் இல்லறம் இனிப்பதில்லை. தொழில் நஷ்டம் துயரத்தில் ஆழ்த்தும்.
எவருக்குமே லக்னாதிபதி 8-ல் நின்றாலும், 8-க்குடையவருடன் சேர்ந்து நின்றாலும், அட்டமாதியின் தசா புக்தி நடக்கும் கோட்சாரங்களில் உடல்பிணி, கடன் பிரச்சினை, வழக்கால் நீதிமன்றத் தொல்லைகள், கண்டாதி தோஷங்கள் ஏற்படுவது திண்ணம். தை மாதத்தில் பிறந்தவர்களுக்கு 8, 17 26-ஆம் தேதிகளும் சனிக்கிழமைகளும் அதிர்ஷ்டமே.
மாசி மாதம் கும்பத்தில் சூரியன் சஞ்சரிப்பார். பல ஞானிகளும், விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் மாசியில் உதித்த மகத்தானவர்களே. நீங்கள் சித்திரை, ஐப்பசி, ஆனி ஆகிய மாதங்களில் பிறந்தவர்களுடன் மணமாலை மற்றும் தொழில் முயற்சி ஏற்றுக்கொண்டால் அதிர்ஷ்ட தேவதை அரவணைப்பாள். கார்த்திகை, ஆவணி, வைகாசியில் பிறந்தவர்களுடன் குணப்போக்குகள் ஒத்துவராமையால், சச்சரவும் தொழில் பிரச்சினைகளுமே அனுபவப்படநேரும்.
இவர்கள் திருமணம் செய்துகொள்ள மற்றும் கூட்டுசேர்ந்து தொழில் ஆரம்பிக்க தவிர்க்கவேண்டியவர்கள் யார் எனக் கேட்டால், நிச்சயமாக பங்குனி, தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் பிறந்தவர்களே. மனம் வெறுக்கும். பணம் கசப்பு நிலை தரும். குடும்பப் பிரிவினை வரலாம். பிறரால் ஏமாற்றப்பட நேரலாம்.
சனிக்கிழமை இவர்களுக்கு அதிர்ஷ்டமே. முக்கிய முடிவுகள் சாதகமாக அமையும்.
தமிழ் மாதம் பங்குனியில் பிறந்தவர்களுக்கு மீனத்தில் சூரியன் சஞ்சரிப்பார். உணர்ச்சிவசத்தால் இரட்டை மனது, இரட்டை புத்தியுடன் லட்சியத்தை அடையும் ராஜயோக ஜாதகர்கள். இவர்களுக்கு கார்த்திகை, புரட்டாசி, ஆடி மாதங்களில் உதித்தவர்கள் நல்ல திருமண உறவுக்கும், வியாபாரக் கூட்டிற்கும் அதிர்ஷ்டமானவர்கள். தவிர்க்கவேண்டிய நபர்கள் மாசி, ஐப்பசி, சித்திரை, ஆவணியில் பிறந்தவர்கள்தான். இவர்களுடன் மணவாழ்வும், துவங்கிய தொழில்போக்கும் சுவாரசியமாக- அனுகூலமாக அமைவதில்லை.
3, 12, 21, 30 ஆகிய தேதிகளும், வியாழக்கிழமையும் சுபகாரிய முயற்சிக்கு லாபகரமானது.
நமது வாழ்க்கையைப் பிரகாசிக்கச் செய்யவே இருக்கின்றன ஆயிரமாயிரமான ஜோதிட சூட்சுமங்கள். ரிஷி அருளால் ஒளிமயமாகட்டும்.
செல்: 94431 33565